பழம்பெரும் நடிகைக்கு “தாதா சாகேப் பால்கே” விருது அறிவிப்பு..!69139042
பழம்பெரும் நடிகைக்கு “தாதா சாகேப் பால்கே” விருது அறிவிப்பு..!
திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது கடந்தாண்டு நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது கடந்தாண்டு நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதினை நடிகர்கள் அமிதாப்பச்சன், அசோக் குமார், ராஜ்குமார், திலீப் குமார், சிவாஜி கணேசன்,வினோத் கண்ணா, இயக்குநர்கள் கே.பாலசந்தர், அடூர் கோபாலகிருஷ்ணன், சத்யஜித் ராய், கே.விஸ்வநாத், பாடகிகள் ஆஷா போஸ்லே, லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பலரும் பெற்றுள்ளனர்.
கடைசியாக 2019 ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக இந்த விழா நடத்தப்படாமல் இருந்த நிலையில், கடந்தாண்டு நடைபெற்ற 67 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ரஜினிக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு இந்தி நடிகை ஆஷா பரேக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தில் 1942 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி பிறந்த ஆஷா பரேக் தனது 10 வயதில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் தனது நடனத்தால் பிரபல திரைப்பட இயக்குனர் பிமல் ராயின் கவனத்தை ஈர்த்தார். இதனால் அவரின் 1952 ஆம் ஆண்டு மா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர் படிப்பு காரணமாக சினிமாவிலிருந்து விலகியிருந்தார். அதன்பின்னர் 1959 ஆம் ஆண்டு இயக்குனர் நசீர் ஹுசைனின் படமான தில் தேகே தேக்கோ படத்தில் ஷம்மி கபூருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
மேலும் இந்தியில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த ஆஷா பரேக் அமிதாப்பச்சனுடன் காலியா என்ற படத்தில் மட்டுமே நடித்துள்ளார். 1980 களின் பிற்பகுதியில் குஜராத்தி சீரியலான ஜோதி மூலம் இயக்குநராகவும் ஆஷா பரிணாமித்தார். அதேசமயம் அக்ருதி என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி பல சீரியல்களை தயாரித்தார். 1994 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை சினி ஆர்ட்டிஸ்ட்ஸ் அசோசியேஷன் தலைவராக இருந்த ஆஷா பரேக் மத்திய அரசின் தணிக்கை வாரியத்தின் முதல் பெண் தலைவராவார்.
தியோஹார் தமாகா என்ற ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்த அவர், 2002 ஆம் ஆண்டு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்றார். 79 வயதான ஆஷா பரேக் இதுவரை திருமணமே செய்துக் கொள்ளவில்லை. பேட்டி ஒன்றில் நான் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற விரும்பினேன். ஆனால் தனக்கு கிடைத்த புகழும், நற்பெயரும் அதனை தடுத்து விட்டதாக தெரிவித்திருந்தார். இயக்குநர் நசீர் ஹூசைனுடன் காதல் வதந்தியில் சிக்கினார். இப்படியான ஆஷா பரேக்கின் வாழ்க்கை வரலாறு தி ஹிட் கேர்ள் என்ற பெயரில் 2017 ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் 2020 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படவுள்ளது.
Comments
Post a Comment